Sunday, July 28, 2013

குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வேண்டாம்

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தலைமுறைப் பெண்களிடம் குழந்தையின்மைப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வருகிறது.  வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் எல்லாம் மாறிப் போனது ஒரு பக்கம் இருந்தாலும், குழந்தை பெற்றுக் கொள்ளும் வயதைத் தள்ளிப் போடுவதும்  பிரச்னைக்கான முக்கிய காரணம் என்கிறார் பிரபல மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

சினைப்பையில் உள்ள முட்டைகளின் இருப்பு குறைவதே காரணம் என்பவர், அதைப் பற்றி விளக்கமாகப் பேசுவதுடன், முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளையும் வலியுறுத்துகிறார். ‘‘ஒரு பெண் குழந்தை, அம்மாவோட வயித்துல உருவாகிறப்பவே, அதோட சினைப்பைல இத்தனை  மில்லியன் முட்டைகள் இருக்கணுங்கிறது தீர்மானிக்கப்படும்.

அந்தக் குழந்தை வயசுக்கு வர்றப்ப, லட்சக்கணக்குல உள்ள அந்த முட்டைகள், மாதவிலக்கு மூலமா மாசா மாசம் வெளியேறி, குறைஞ்சுக்கிட்டே  வரும். பிரசவத்தின் போது இன்னும் குறையும். இப்படி குறைஞ்சுக்கிட்டே வந்து, ஒரு கட்டத்துல முழுக்க முட்டைகளே இல்லாமப் போகிறப்ப,  மாதவிலக்கு வராது. அதைத்தான் மெனோபாஸ்னு சொல்றோம்.

சினைப்பையில முட்டைகள் உருவாகும்போதே கம்மியா இருந்தா, 30, 35 வயசுலயே பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கலாம். அதை ‘ப்ரீமெச்சூர்  ஓவரியன் சின்ட்ரோம்’னு சொல்றோம். இந்தத் தலைமுறைப் பெண்கள், வேலை, சொந்த வீடு, வசதிகள்னு வாழ்க்கையில செட்டிலான பிறகுதான்  கல்யாணம், குழந்தை பத்தி யோசிக்கிறாங்க. 30 வயசுல கல்யாணம் பண்ணிட்டு, 35 வயசுல மாதவிலக்கு சுழற்சி சரியில்லை, குழந்தை இல்லைன்னு  சொல்லிட்டு, சிகிச்சைக்கு வருவாங்க.

டெஸ்ட் பண்ணிப் பார்த்தா, அது மெனோபாஸுக்கான அறிகுறியா இருக்கும். இன்னும் சில பெண்களுக்கு சின்ன வயசுல சினைப்பை கட்டிகள் வந்து,  அதுக்காக ஆபரேஷன் செய்திருப்பாங்க. அதனாலயும் சினைப்பையில உள்ள முட்டைகளோட இருப்பு குறைஞ்சு, ‘ப்ரீமெச்சூர் ஓவரியன் சின்ட்ரோம்’  பிரச்னை வரலாம். இப்பவும் சின்னச் சின்ன கட்டிகளுக்கு ஆபரேஷன் பண்ணிக்கிட்டு, பாதி முட்டைகள் குறைஞ்ச நிலையில கிராமத்துலேருந்து வர்ற  பெண்கள் ஏராளம்.

கட்டிகள் இருக்கிறது தெரிஞ்சா, கூடியவரைக்கும், அதை அறுவை சிகிச்சையில அகற்றாம, சினைப்பையைத் தொந்தரவு பண்ணாம குணப்படுத்த  முயற்சி பண்றதுதான் பாதுகாப்பானது. அடுத்து, எக்ஸ் ரே போன்ற ரேடியேஷன் தொடர்பான துறைகள்ல வேலை செய்யற பெண்களுக்கும், சினைப்பை  முட்டைகள் அழிய வாய்ப்புகள் அதிகம். அந்த அபாயம் தெரிஞ்சு, இந்தப் பெண்களும், திருமணத்தையும், குழந்தைப் பேற்றையும் தள்ளிப் போடாம  இருக்கிறது நல்லது.

அம்மாவுக்கு இள வயதுலேயே மாதவிலக்கு நின்றிருந்தால், அவங்க பெண்கள் எச்சரிக்கையா இருக்கணும். உடனடியா மருத்துவரைப் பார்த்து,  தேவைப்பட்டா, ஏ.எம்.ஹெச் என்ற ஹார்மோன் சோதனையை செய்து பார்த்து, கருத்தரிக்கும் திறனைத் தெரிஞ்சுக்கிட்டு, தகுந்த சிகிச்சைகளை  எடுத்துக்கலாம். அலட்சியமா விட்டுட்டு, பிறகு குழந்தையின்மைக்காக, ஐ.வி.எஃப் மாதிரியான நவீன சிகிச்சைகளைத் தேடி ஓட வேண்டிய  அவதிகளையும் இதன் மூலம் தவிர்க்கலாம்...’’ என்கிறார் டாக்டர் ஜெயராணி.

1 comment:

  1. Dr. Jayarani madam ungaloda Hospital enga erukunu solluga plz... Ennaku PCOS problem eruku... kalyanam agi 2 year agiduchi innum kolanthai ellai... please help pannuga...

    jothi

    ReplyDelete